கடந்த ஒரு மாத காலமாக, மலையாள தேசத்திலிருந்து கன்னட தேசத்திற்கு இடப்பெயர்ச்சி ஆகி இருந்தேன். பணி நிமித்தமான இடமாறுதல். இதற்கு முன், பெங்களூருவைத் தாண்டி, இந்தியாவின் மேற்பகுதிகளுக்கு சென்றிராததால், மங்களூர் பயணத்தினை ஆவலுடனே எதிர்பார்த்திருந்தேன்.
அரபிக்கடலின் ஓரமாக, கேரள-கன்னட எல்லையோரம் அமைந்திருக்கும் நகரம், மங்களூர். இன்ஃபோசிஸில் இருந்து மங்களூரிலும் ஒன்று அல்ல இரண்டு மென்பொருள் உருவாக்க மையங்கள் (Software Development Center) அமைத்துள்ளனர். அதில் ஒன்றுக்குத்தான் நான் பயணமாகியிருந்தேன். மலபார் எக்பிரஸில் ரயில் பயணம் - ஒரு புறம் அரபிக்கடல் ஆர்ப்பரிக்க, ம்றுபுறம் கேரளக் காடுகளும், தூரத்தே தொடர்ந்து வரும் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் என இயற்கைக்கு நடுவே பயணமாகி, ஒரு மழை நேரத்துக் காலையில் மங்களூரில் இறங்கினேன் (இது நடந்தது ஒரு மாதத்திற்கு முன்பாக என்பதனையும் இங்கே சொல்ல கடமைப்பட்டுள்ளேன்!).
நான் சென்றிருந்த நேரம் மங்களூரில் ஒரு மழைக்காலம். காலை, மதியம், இரவு என மழை ‘ஓவர்-டைம்' பார்த்துக் கொண்டிருந்தது. இதனாலயே, முதல் வார ஓய்வில், நேரம் கிடைத்தும், மங்களூருவைச் சுற்ற முடியவில்லை. ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மழை பெய்தால், கையில் ஒரு காஃபி கோப்பையை வைத்துக் கொண்டு (உ.பா பிரியர்கள் வேறு எதாவது வைத்துக் கொண்டு!), ஜன்னல் கம்பியில் வழியே மழையை ரசிக்கலாம். போனால் போகிறதென்று ஒரு கவிதைக் கூட எழுதலாம். ஆனால், 24/7 என்று மழை பெய்தால், வீட்டிற்குள்ளேயே அடைந்து, கன்னடத் தொலைக்காட்சிகளில் ஆரம்பித்து, உலகத் தொலைக்காட்சிகளில உலவி, தமிழ்ப் படங்களே சரணம் என விழுந்து, மின்சாரம் நின்றால், அறுவைப் புத்தகங்களில் தொலைந்து - சரியான ‘போர்'. என் முதல் வார மங்களூர் மேற்கண்ட நிகழ்வுகளால் மட்டுமே நிரம்பியிருந்தது. பின், இரண்டாவது வாரத்தில் இருந்து, சூரியன் கொஞ்சம் பயம் தெளிந்து வெளியே எட்டிப் பார்க்க ஆரம்பித்ததால், குடை மறைந்தாலும் நனையாமல் அலுவலகத்திலிருந்து அறைக்குத் திரும்ப முடிந்தது.
மழையில் நனைந்திருந்தாலும் மங்களூர் கேரளாவினைப் போல் வெகு அழகு. பெரிய நகரமில்லாவிட்டாலும், மெட்ரோபாலிட்டன் நகரங்களுக்கே உரிய வசதிகள் நகரில் ஆங்காங்கே எட்டிப்பார்க்கின்றன (இவ்வருட ஜனவரியில் ‘ராம் சேனா'வினர் மங்களூர் பப் ஒன்றில் புகுந்து,
பெண்களைத் தாக்கியது நினைவிருக்கலாம்). வணிக வளாகங்கள் நிறையத் தென்பட்டன. ஆட்டோவில் மீட்டர் போட்டு பணம் வாங்குகிறார்கள். தனியார் பேருந்துகள் சாலைகளில் பேயோட்டம் ஓடுகின்றன. கல்லூரி மாணவர்களும், பெண்களுமாக காலை சாலைகளில் இளைஞர் கூட்டம்தான்(மணிப்பால் பல்கலைக் கழகம், மங்களூருவிற்கு மிகப் பக்கம்). தமிழ்ப் படங்களின் சுவரொட்டிகளை அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் காண முடிந்தது (தமிழ்ப் படங்களைக் காண, கேரள ஊரான காசர்கோட்டிற்கு செல்வார்களாம் - அலுவலக நண்பர் சொன்னது). தெருவிற்கு மூன்று இடங்கிளாலவது ஒயின்ஷாப். பரவலாக இனிப்புக் கடைகள். பல இடங்களில் ரோட்டோர பானிபூரிக் கடைகள். நகரைச் சுற்றி அபார்ட்மெண்ட் காடுகள் நிறைய முளைத்துள்ளன. மொத்தத்தில் வளர்ந்து வரும் பெருநகரம் - மங்களூர்.
--
இன்னும் சில அனுபவங்கள் மீதி உள்ளன. அடுத்த பதிவில் தொடர்கிறேன்.